முத்தம்-சுத்தம் -சுகாதாரம். Print E-mail
Written by Dr. Somash   

முத்தத்தினால் பல நன்மைகள் இருக்கின்றன. தங்களது அன்பின் ஆழத்தை இது தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிற்றின்ப நுகர்வுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆழமாக, நிதானமாக அளிக்கப்படும் முத்தம் ஒன்றின் மூலம் 60 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறது. முத்தம் முகச்சுளிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வாயைச் சுத்தமாக வைத்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது.

''நெற்றி, உச்சந்தலை, கைகள் போன்றவற்றில் கொடுக்கப்படும் முத்தங்களினால் நோய்த்தொற்றுகள் அதிகமாகப் பரவுவது இல்லை. இவை மேலோட்டமான முத்தங்கள். ஆனால், உதட்டின் மீது உதட்டைப் பொருத்தி, உமிழ்நீர்கள் பரிமாற்றம் ஆகின்ற முத்தங்களின்போது கண்டிப்பாக எச்சரிக்கை தேவை.

 

ஒருவரின் உமிழ்நீரில் நோய்களைப் பரப்பும் நுண் உயிரிகள் ஏராளமாக இருக்கின்றன. அவை ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு போனால், சளி, ஃப்ளூ போன்றவை தொற்றிக்கொள்ளக்கூடும். மோனோ நியூக்ளியோஸிஸ் என்னும் நோய் உமிழ்நீரில் இருக்கும் 'ஏப்ஸ்டெயின்பார்’ வைரஸ் மற்றும் 'சைடோமெகாலோ’ வைரஸ்களால் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொண்டையில் வெண் படலம் தோன்றும். தசைகளில் வலி இருக்கும். பசியின்மை தோன்றும். உடலில் கொப்பளங்களும் வரலாம். கன்னங்களின் உட்புறச் சுவர்கள், நாக்கு, வாயின் மேல் அண்ணம் மற்றும் பற்கள் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 'ஸ்ட்ரெப்டோகோகஸ்’ என்னும் பாக்டீரியா ஈறு நோய்கள், தொண்டைப் பிடிப்பு உள்பட பல்வேறு நோய்களுக்குக் காரணம் ஆகிறது.

மூக்கு, வாய், தொண்டை மற்றும் சுவாசப் பாதை ஆகிய அனைத்துமே தொடர்ச்சியாகவும் ஒரே விதமான திசுக்களாலும் ஆனவை. எனவே, உமிழ்நீரில் இருக்கும் கிருமிகள் முத்தத்தின்போது பரிமாறப்பட்டு ஓரிடத்தில் ஏற்படும் தொற்று எளிதாக மற்ற இடங்களுக்கும் பரவிவிடும்.

கல்லீரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ் வைரஸ் உமிழ்நீரில் இருக்கிறது. முத்தமிடுவதன் மூலம் நிச்சயம் இது அடுத்தவருக்குத் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. ஹெச்ஐவியைப் பொருத்தவரை முத்தமிட்டுக்கொள்கிறவர்களின் வாயில் புண்களோ ரத்தக் கசிவோ இருந்தால் பரவ வாய்ப்பு இருக்கிறது.

வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு ஈறுகளில் கேண்டிடா என்னும் ஈஸ்ட் உயிரியால் தொற்று ஏற்படும். அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். இதுவும் முத்தத்தின் மூலம் பரவக் கூடியதே. அடிக்கடி வாய் உலர்ந்து போகிறவர்களின் வாயில் மற்றவர்களைவிடவும் நான்கு மடங்கு எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும்.

உமிழ்நீருக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உண்டு. உமிழ்நீரில் இருக்கும் லைசோஸைம் போன்ற வேதிப்பொருட்களுக்கு, தீங்கு செய்யும் நுண் உயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிலவற்றை இது அழிப்பதில்லை. உரிய துணை/இணைக்கு மட்டுமே முத்தம் கொடுப்பதன் மூலமும் முத்தமிடும் முன்னும் பின்னும் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முத்தத்தினால் வரும் நோய்களின் தொற்றை முற்றாகத் தவிர்க்கலாம். எனவே 'இச்’சுக்கு முழுவதுமாகத் தடா போட வேண்டிய அவசியம்இல்லை.சுத்தம் சுகாதாரம் இவற்றிற்கு முன் உரிமை கொடுத்தல் நலமே.

தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.