கறி வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்து அதை சரியான முறையில் பயன் படுத்துவோம்நண்பர்களே! Print E-mail
Written by Dr. Somash   

கறி வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்து அதை சரியான முறையில் பயன் படுத்துவோம்நண்பர்களே!

 

இளநரை மறையும்:

கிராமப்புறங்களில் சிறு வயதிலேயே இளநரை ஏற்பட்டால், கறிவேப்பிலையோடு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாப்பிடக் கொடுப்பார்கள். பித்தம் கூடினாலோ, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ, இளநரை உருவாகும். முடியின் கறுமை நிறத்துக்குத் தேவை இரும்புச் சத்து. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகம். சின்ன வெங்காயம் ரத்தத்தைச் சுத்திகரித்து, பித்தத்தைக் குறைக்கும். இதனால் இளநரை குறைந்து முடிகள் கறுப்பாகும். முடி வளர்ச்சிக்குப் புரதமும் இரும்புச் சத்தும் தேவை. 50 கிராம் உளுந்துடன், 25 கிராம் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நல்ல முடி வளர்ச்சி கிடைக்கும்.

சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்:

10 வருடங்களுக்கும் மேலாக சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு டயபட்டிக் நியூரோபதி வலி (Diabetic Neuropathic Pain)உண்டாகும். அதாவது, ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுவதால், புற நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகி ஏற்படும் வலி இது. கறிவேப்பிலையில் நிறைந்துள்ள 'கார்பஸோல் ஆல்கலாய்டு’(Carbazole alkaloids)என்கிற வேதிப் பொருளுக்கு இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.

'ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கறிவேப்பிலையின் பங்கு அதிகம்’ என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்து உள்ளனர். இதனை 'கிளைக்கோசிலேட்டட் ஹீமோகுளோபின்’(Glycosylated Hemoglobin & HbA1c)பரி   சோதனை மூலம் அறியலாம். இது தவிர, உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு வகையான ஹெச்.டி.எல். (High Density Lipo Protein)  அளவையும் கறிவேப்பிலை உயர்த்துகிறது. கறிவேப்பிலை இலையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தினசரி காலை, மாலை 10 கிராம் வீதம் நீரில் கலந்து பருகி வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

ரத்தசோகையை மட்டுப்படுத்தும்:

இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள கறிவேப்பிலை ரத்த   சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பினால் இரும்புச் சத்து குறையும். இதைச் சரிக்கட்டக் கறிவேப்பிலையைவிடச் சிறந்த மருந்து கிடையாது.

குழந்தைப்பேறு கிட்டும்:

கறிவேப்பிலையில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்டுகள் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகின்றன. 20 கிராம் கறிவேப்பிலையுடன் மூன்று கிராம் சீரகம், ஒரு கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து குடித்துவந்தால், பித்தச் சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

'கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’   இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்.

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!