கண்ணுக்கு முன்னால் மின்மினிப்பூச்சி பறக்கிறதா? Print E-mail
Written by Dr. Somash   

கண்ணுக்கு முன்னால் மின்மினிப்பூச்சி பறக்கிறதா?

கண்களில் பொதுவாக நான்கு விதமான நோய்கள் வருகின்றன.

1. டயாபெடிக் ரெடினோபதி (Diabetic Retinopathy - DR): சர்க்கரை நோய் விழித்திரையைப் பாதிக்கும்போது அதை 'டயாபெடிக் ரெடினோபதி’ என்று குறிப்பிடுகிறார்கள். இதனால், கண்ணில் உள்ள முக்கியமான ஆப்டிக் நரம்பு பாதிப்பதோடு புரை ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். கண் தசைகளும் பாதிக்கப்பட்டு கண்களை அசைக்கக்கூட முடியாமல் போகும். இந்தப் பிரச்னை வருவதற்தான எந்தவித முன்அறிகுறியும் வெளியே தெரியாது. பரிசோதனையின்போதுதான் பாதிப்பு தெரியவரும். எனவே, 10 முதல் 15 வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை டயாபெடிக் ரெடினோபதி பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

2. க்ளகோமா (Glaucoma): உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் க்ளகோமா பாதிப்பு ஏற்படலாம். பார்வையில் மாற்றம் தெரிவதற்கு முன்பே, கண்ணின் முக்கிய நரம்பில் 30 முதல் 50 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். அடிக்கடி மூக்குக் கண்ணாடியின் பவர் மாறுவது, கண் வலியுடன் தலைவலியும் ஒரே நேரத்தில் வருவது, எரிந்துகொண்டு இருக்கும் விளக்கினைப் பார்த்தால், அதைச் சுற்றிப் பல வண்ண வட்டங்கள் அல்லது புள்ளிகள் தெரிவது ஆகியவையே இதன் அறிகுறிகள். சிலருக்கு இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது. கண்ணில் ஏற்படும் காயம், ஸ்டீராய்டு வகை மருந்துகள் பயன்படுத்துவது போன்றவையும் க்ளகோமா பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஏற்பட்டுவிட்ட பாதிப்பை சிகிச்சையின் மூலம் சரிசெய்துவிட முடியாது. பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்குத்தான் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. அதனால், பாதிப்பு கொஞ்சமாக இருக்கும்போதே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

3.  புரை (Cataract): பார்வை பறிபோவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானக் காரணம், கண் புரை (காட்ராக்ட்) நோய். கண்ணில் ஏற்படும் சதை - தோல் வளர்ச்சிதான் 'கண் புரை’ என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு. கண்ணில் இருக்கிற லென்ஸ் கண்ணாடிபோல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒளி ஊடுருவ முடியும். அந்த கண்ணாடி போன்ற லென்ஸ் மெள்ள மெள்ளத் தெளிவு குறைந்து வெள்ளை அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடுவதுதான் கண்புரை நோய். இப்படி நிறம் மாறிய லென்ஸின் வழியாக விழித்திரையில் பதியும் உருவம் தெளிவில்லாமல் இருக்கும். முதுமையில் தலை முடி நரை ஏற்படுவதுபோல் லென்ஸில் நிறமாற்றம் ஏற்படுகிறது. வைட்டமின் மற்றும் புரதச் சத்து குறையும்போதும், சர்க்கரை நோய், தொற்று நோய் ஆகியவற்றாலும் கண்புரை ஏற்படலாம்.  கண்புரை அறுவைசிகிச்சை என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. இரண்டு மணி நேரத்துக்குள்  அறுவைசிகிச்சை செய்துகொண்டு நோயாளிகள் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

4. மாகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration - MD): 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வையை இழப்பதற்கு முக்கியமான காரணம் மாகுலர் டீஜெனரேஷன். வயதாவதுதான் இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணம். நோயாளிகளுக்குக் கண் பார்வை குறைவதைத் தவிர வேறு எந்த அறிகுறியும் தெரியாது. படிப்பது, கார் ஓட்டுவது, டி.வி. பார்ப்பது, எதிரில் இருப்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது ஆகியவை எல்லாமே கடினமாக இருக்கும். இந்த நோய் ஏன் சிலருக்கு வருகிறது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பாதிப்பை லேசர் சிகிச்சை மற்றும் லோ விஷன் எய்ட்ஸ் சிகிச்சைகள் செய்து குணப்படுத்தலாம்.

தினசரி உணவில் மாவுச் சத்து, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொண்டாலே, ஓரளவு இந்தப் பாதிப்பைத் தடுத்துவிடலாம்.

''தெளிவு இல்லாத பார்வை, கண் உறுத்தல், அருகில் - தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம், ஒரு உருவம் இரண்டு உருவமாகத் தெளிவின்றித் தெரிதல், காரணமே இல்லாமல் கண்ணீர் வடிவது, கண் புருவத்தில் வலி, வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் இடையே பார்வை வித்தியாசம், கண்கள் அடிக்கடி சிவந்துபோதல், மின்மினிப் பூச்சி பறப்பதுபோன்ற பிரமை, அதிகப்படியான கண் கூச்சம், மாறு கண், கண் பாப்பாவில்(Pupil) வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் தோன்றுதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாகக் கண் மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்!''