அற்புதம் நிகழ்த்தும் ஆடி மாதப்பெருமை! Print E-mail
Written by Dr. Somash   

அற்புதம் நிகழ்த்தும் ஆடி மாதப்பெருமை!

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் சான்றோர்கள். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது.

ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம். தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன சாஸ்திரங்களும் ஞான நூல்களும்.

தட்சிணாயனம் துவங்குகிற ஆடி மாதத்தில், சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்பர். எனவே வேத பாராயணம், மந்திர ஜபங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு உகந்த காலம் இது எனப் போற்றப்படுகிறது. தவிர, நம் சுவாசத்துக்குத் தேவையான பிராணவாயு அதிகம் கிடைப்பதும் இந்த மாதத்தில்தான்.

அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள், பக்தர்கள்.ஆடி மாதம் முழுவதும் வழிபட்டு, வணங்குவதற்கு உரிய மாதம் என்றாலும், ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் ரொம்பவே விசேஷம்!

தொகுப்பு: ஸ்ரீமதி மதிவதனா உமாசுதக்குருக்கள்  (B.A Hons Teacher)