அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு: Print E-mail
Written by Dr. Somash   

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு:

கால்சியம், வைட்டமின் போன்ற மாத்திரைகளை இப்படி அறியாமையால் வருடக்கணக்கில் தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் ஒருபுறம் என்றால்... 'இதுபோன்ற மாத்திரைகளை எல்லாம் தொடர்ந்து சாப்பிட்டால்தான் உடம்பு தெம்பாக இருக்கும்’ என்று அறியாமையின் உச்சத்தில் இருப்பவர்களும் உண்டு.

'கால்சியம், வைட்டமின் போன்ற சத்து மாத்திரைகளை எவ்வளவு சாப்பிடலாம், எத்தனை நாள் சாப்பிடலாம்’ என்பதை மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே சாப்பிட வேண்டும். ஏனெனில், சில சத்து மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிடும்போது அவை வேறு பல பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும்.

''சத்துக்கள் குறைந்தால் மட்டும் அல்ல... சில வகைச் சத்துக்கள் உடலில் அதிகமானாலும் ஆபத்துதான்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. ஒவ்வொருவரின் வயதுக்கு ஏற்ப, தேவைப்படும் சத்துக்களின் அளவும் மாறும். பொதுவாக தேவைக்கும் அதிகமாகச் சேர்ந்துவிடும் சத்துக்களை உடலே வெளியே தள்ளிவிடும். ஆனால், சில சத்துக்கள் அப்படி வெளியேறாமல், உடலிலேயே தங்கி பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கும். எனவே, கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது தவறு. வைட்டமின்களைப் பொருத்தவரை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில் கரையும் வைட்டமின்கள் என இரண்டு வகை உண்டு. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்தான் உடலில் தங்கி, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நீரில் கரையும் வைட்டமின்கள் சிறுநீருடன் வெளியேறிவிடும்; எனவே, பிரச்னை இல்லை.

வைட்டமின் ஏ, வைட்டமின் டி இரண்டும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். கண் பார்வை, சரும ஆரோக்கியம், கருவுறுதல், உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவுகிற வைட்டமின் ஏ, தேவைக்கு அதிகமாகும்போது, எலும்பு - தசைகளில் சேர்ந்து அதீத வலுவைக் கூட்டிவிடுகிறது. இதனால், எலும்பின் வளைந்து கொடுக்கும் தன்மை குறைந்து கடினப்பட்டுவிடும். நரம்புத் தொடர்பான பிரச்னைகள் வரும். கூடவே தலைவலி, தோல் உரிதல், முடி உதிர்தல், உதடு வெடிப்பு, கண்பார்வை மங்குதல், பசியின்மை, வாந்தி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

பல், எலும்பு உறுதிக்கும், ரத்தம் உறையவும், நரம்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் உதவுவது கால்சியம். உணவில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியம். ஆனால், இதே வைட்டமின் டி சத்து அதிகமாகும்போது, உறிஞ்சப்படும் அதிகப்படியான கால்சியமானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடும். இதனால் சிறுநீரகக் கற்கள் உருவாவது மற்றும் சிறுநீரகம் பழுதடைவது, மலச்சிக்கல் பிரச்னை, குமட்டல், அடிவயிற்றில் வலி, அதீதத் தாகம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உச்சக்கட்டமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

நுரையீரலில் இருந்து உயிர் அணுக்களுக்குப் பிராண வாயுவை எடுத்துச்செல்லும் சிவப்பு அணுக்களை இயங்கவைப்பது இரும்புச் சத்து. இது அதிகமானால், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உள் உறுப்புகளில் போய் தங்கிவிடும். இதனால், நரம்பு தொடர்பான பிரச்னைகள், சருமம் சுருங்கிக் கருத்துப்போதல், குமட்டல், அடி வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு, கல்லீரல், இதயத்தில் பாதிப்பும் உண்டாகும்.

மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஆனால், 'நமக்கு வைட்டமின் குறைபாடு இருக்கிறது’ என்று நினைத்து தாங்களாகவே மல்டி வைட்டமின் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர் சிலர். இந்தப் பழக்கம், திடகாத்திரமான ஒருவரையும் நோயாளியாகப் படுக்கவைத்துவிடும்.

'கால்சியம் மாத்திரை சாப்பிட்டால்தான் உடம்பே தெம்பாக இருப்பது மாதிரி இருக்கிறது டாக்டர்!’ என்று என்னிடம் சொல்கிறவர்களுக்கு, 'உடற்பயிற்சி செய்யாமல், வெறும் கால்சியம் மாத்திரைகளை உட்கொள்வதால் எந்தப் பலனும் இல்லை! எனவே, கால்சியம் மாத்திரைக்குப் பதிலாக கால்சியம் அதிகமாகக் கிடைக்கும் பால்,  கீரை போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

சரிதான்... அளவுக்கு மீறினால் வைட்டமினும் நஞ்சு!

தொகுப்பு: ஸ்ரீமதி மதிவதனா உமாசுதக்குருக்கள் (B.A  Hons)