பெண்களுக்கு......நலம் தேடுங்கள்... நாற்பதில் ! Print E-mail
Written by Dr. Somash   

பெண்களுக்கு......நலம் தேடுங்கள்... நாற்பதில் !

நாற்பது வயது... அரை ஆயுளை அடைந்திருக்கும் பருவம். 'பின் இளமை, முன் முதுமை' எனப்படும் இப்பருவத்தில்... பெண்கள் தங்கள் அகம், புறம் இரண்டிலும் எடுத்துக் கொள்ள வேண்டிய அக்கறை நிறைய!

இந்த வயதுக்கென்றே சில உடற்பிரச்னைகள் உண்டு. அதில் முதன்மையானது... 35 - 45 வயது வரையுள்ள பெண்களுக்கு நேரக்கூடிய 'பிரீ மெனோபாஸல் சிண்ட்ரோம்' (Pre Menopausal Syndrome) என்பதுதான். மாதவிடாய் சுழற்சிக் காலம் சுருங்குவது, கோபம், மன அழுத்தம், மார்பைத் தொட்டால் கடினத்தன்மை மற்றும் வலி உணர்வது, மாலை நான்கு மணிக்கு மேல் அதிக சோர்வை உணர்வது, முடி கொட்டுவது, சருமம் வறண்டுபோவது போன்றவை இதற்கான அறிகுறிகள். இந்த அவஸ்தைகளுடன் போராடாமல், விரைந்து ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை எடுத்தால்... இரண்டு, மூன்று மாதங்களிலேயே இப்பிரச்னையில் இருந்து குணம் பெறலாம்.

மார்பகப் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்... இவை இரண்டும் இந்த வயதுப் பெண்களை டார்கெட் செய்யும் நோய்கள். 40 வயது ஆகிவிட்டாலே... மாதத்துக்கு ஒருமுறையாவது மார்பகங்களில் கட்டிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டியது முக்கியம். மார்பகங்களில் கடினத்தன்மை உணர்வது, மார்புக் காம்பு உள்ளிழுத்துக் கொள்வது போன்றவையும் கவனத்தில்கொள்ள வேண்டிய அறிகுறிகள்.

40 வயதுக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒருமுறையாவது கேன்சரைக் கண்டறியும் 'மேமோகிராம்’ பரிசோதனை, கர்ப்பவாய் புற்றுநோயைக் கண்டறியும் 'பாப்ஸ்மியர்’ பரிசோதனை மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் 'கைனக் செக்கிங்' செய்துகொள்வது நல்லது. 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது நல்ல முடிவல்ல. எனவே, இரண்டாவது குழந்தையை 35 வயதுக்குள்ளாகவே பிளான் செய்வது நல்லது. தவிர, இந்த வயதுக்காரர்களுக்கு சர்க்கரை நோய், மூட்டுவலி, தூக்கமின்மைப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. லைஃப் ஸ்டைலை ஆரோக்கியமானதாக மேம்படுத்திக் கொள்வதன் மூலம், இப்பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்.

வாக்கிங், ஏரோபிக்ஸ், யோகா, பவர் யோகா போன்ற உடற்பயிற்சிகளை வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்யலாம். கூடவே, உணவுக் கட்டுப்பாடு முக்கியம். தினமும் ஒரு வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாளாவது வெஜிடபிள் சூப் சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு நாள் பிரேக்ஃபாஸ்ட் அல்லது டின்னருக்குப் பதிலாக... ஃப்ரூட் சாலட் சாப்பிடலாம்.

நரைமுடி பரவலாகும் நாற்பது வயதில், அதை மனதளவில் பெரிய பிரச்னையாக சில பெண்கள் உணர்வார்கள். பரம்பரை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பயோடின், ஸிங்க் மற்றும் மெக்னீஷியம் குறைபாடு, கூடவே முதுமை... இவையெல்லாம் நரைமுடி ஏற்படுவதற்கான காரணங்கள். நரைமுடியை வேரிலிருந்து மீண்டும் கருமையாக வளரச் செய்வது இயலாத காரியம். எனவே, 'நரையைப் போக்கும்’ என்று விளம்பரப்படுத்தப்படும் எந்த மூலிகை, மருந்துகளையும் நம்பி ஏமாற வேண்டாம்.

நரை, தங்களது தன்னம்பிக்கையை குறைக்கும் என்று நினைப்பவர்கள், ஹேர்கலர்கள் பயன்படுத்தலாம். அமோனியா கலந்த ஹேர் டை, 'அமோனியா ஃப்ரீ ஹேர் டை' என இதில் இரண்டு வகைகள் உண்டு. கெமிக்கல் அலர்ஜி உள்ளவர்கள், 'அமோனியா ஃப்ரீ ஹேர் டை' பயன்படுத்தலாம். ஹென்னா பயன்படுத்தும்போது அது கேசத்தை வறட்சியாக்கிவிடும் என்பதால், ரெகுலராகப் பயன்படுத்தாமல் மீட்டிங், ஃபங்ஷன் என முக்கிய தினங்களுக்குப் பயன்படுத்தலாம்.

பொதுவாக, 40 வயதைக் கடந்த ஆண்களுக்கு வழுக்கை விழுவது இயல்பு. ஆனால், பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், வழுக்கை விழுவதில் இருந்து காப்பதால்... அதைப் பற்றிய கவலை இல்லை. 40 வயதுக்கு மேல் ஹெவி மேக்கப் வேண்டாம். மைல்டாக செய்துகொள்ளலாம்.   எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம்... மனநலனை பாதுகாப்பதுதான். கவலைகளை விட்டுவிட்டு, புன்னகையைச் சூடிக் கொண்டால், அழகும் இளமையும் நாற்பதிலும் விலகாது!

தொகுப்பு: பாரதி சுகப்ரதன்.