குழந்தை ஏன் அழுகிறது? Print E-mail
Written by Dr. Somash   

ரு குழந்தை பிறந்ததில் இருந்து, அதற்கு இரண்டு வயது ஆகும் வரை உள்ள காலம்தான் குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு தாய்க்கும் சவாலான காலகட்டம். குழந்தையின் அழுகைக்கு என்ன அர்த்தம்? என்னென்ன பிரச்னைகளுக்காகக் குழந்தை அழும்? குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது? என அழுகையின் அர்த்தங்களைச் சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் த.தங்கவேலு.

குழந்தை அழுதால், அது பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மார்களின் நினைப்பு. பசியையும் தாண்டிப் பல காரணங்களுக்காகவும் குழந்தை அழக்கூடும். குழந்தை அழத் தொடங்கினால், முதலில் கைகளில் தூக்கிக் குழந்தையைப் பரிசோதித்துப் பாருங்கள். கைகளில் தூக்கியவுடனேகூட சில குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும். சில சமயங்களில் குழந்தையிடம் பேசவோ அல்லது சிரிக்கவோ செய்தால், குழந்தை சமாதானமாகும்.

பூச்சிகள், தடிப்புகள்:

தன்னுடைய உடலில் ஏதேனும் ஊர்வதுபோல, புதிதாக குழந்தைகள் உணர்ந்தால், குழந்தைகள் அழலாம். எறும்புகள் போன்ற பூச்சிகள் கடித்தாலோ, சீறுநீர் கழித்து இருந்தாலோ, அதைத் தெரியப்படுத்தவும் அழலாம். குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை காரணமாக சில சமயம் சிவந்த தடிப்புகள் உருவாகும். ஏழு நாட்களுக்குள் இது குணமாகிவிடும். ஆனால் தடிப்புகளோடு சேர்ந்து குரல் நாணையும் ஒவ்வாமை தாக்கி இருந்தால், சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். குழந்தை அழும் சத்தத்துடன் குரலும் மாறுபட்டிருக்கும்.

காது வலி - வயிற்று வலி:

குழந்தைகளுக்கு வயிற்று வலியும் காது வலியும் சகஜமாக ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும்போது காற்று குழந்தையின் வாய் வழியாகச் சென்றிருந்தால், வாயுத் தொந்தரவினால் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படலாம். தன்னுடைய காலை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்று வலி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு அதன் முதுகைத் தட்டிக்கொடுக்கலாம். இதனால் குழந்தையின் வயிறு தோள்பட்டையில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். காதின் உட்பகுதிக்குள் 'மிடில் ஏர்’ என்ற ஒரு குழாய் பகுதி இருக்கிறது. இதில் ஏதாவது சீழ்க்கட்டிகள் இருந்தால்கூட, குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும். காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும்.

கபத் தொல்லை:

கபம் என்கிற சளி பொதுவாக மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும். இதில் மூக்கில் மட்டும் நீர் வடிந்துகொண்டு இருந்தால், பயப்படத் தேவை இல்லை. ஆனால் சளியோடு சேர்ந்து மூச்சிரைப்பும் இருந்தால், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை அறியலாம். குழந்தை பால் குடிக்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

தவறான தூக்கு:

ஆறு மாதம் வரையிலும் குழந்தையின் கழுத்துப் பகுதியில் நல்ல பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இல்லையெனில், குழந்தையின் கழுத்துப் பகுதியில், சுளுக்கு ஏற்பட்டு வலி வரலாம். இதற்கு சுய மருத்துவம் செய்யக் கூடாது; உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுக்கொள்வதுதான் சரியானத் தீர்வு. சில சமயங்களில் குழந்தையின் குடல் பின்னிக்கொள்ளக் கூடும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்காமல் அழும். குழந்தையின் மலத்தில் ரத்தம் கலந்து வரும். கூடவே வாந்தியும் எடுக்கும். குடல் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று முடிச்சு விழுந்ததுபோல மாட்டிக்கொள்ளும். இடுப்பின் முன் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். வலி ஏற்பட்டு குழந்தை அழும்.

வயிற்றுப்போக்கு:

வயிற்றுப்போக்கு காரணமாக, இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் குழந்தை மலம் கழித்தால், குழந்தையின் உடலில் நீர் அதிகமாக வெளியேறிவிடும். இதனால், தாகம் அதிகரித்துக் குழந்தைக்கு நாக்கு வறண்டு அழும். மருத்துவரைப் பார்க்க வருவதற்குள் உப்பு சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.