Control your Blood Pressure! Print E-mail
Written by Dr. Somash   

ரத்த அழுத்தம் கட்டுக்குள் வர மாத்திரைகள் மட்டுமே போதாது. உங்கள் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் வர வேண்டும். இதில் முதலாவது... உணவில் உப்பை முடிந்த அளவு குறைப்பது. ரத்த அழுத்தம் தாறுமாறானால், ஊறுகாய், வத்தல், வடாம் உள்ளிட்ட உப்புப் பதார்த்தங்களைத் தவிர்த்தல் நலம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். மனப்பதற்றம், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி அவசியம். ரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இருந்தால், அவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தாமல் நீங்கள் மாத்திரை அளவை அதிகரித்தாலும் பலன் இருக்காது.

120/80 என்ற சராசரி ரத்த அழுத்தத்தில் சிறிய அளவில் மாறுபாடு ஏற்படுவது சகஜமானது. உடல்வாகு, உடலில் பொதிந்திருக்கும் வேறு பல பிரச்னைகள், பணிச் சூழல் போன்றவற்றால் டென்ஷன் அதிகரித்துப் பலருக்கும் ரத்த அழுத்தம் ஏறி இறங்குவது வழக்கம். இந்த மாறுபாடு அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் கட்டுக்குள் வந்துவிடும். ஆனால், உயர் ரத்த அழுத்தம் என்பது அரை மணி நேரத்தையும் தாண்டி நீடிக்கும். கூடவே தலைசுற்றல், தலைவலி, தலைபாரம் உள்ளிட்ட உபத்திரவங்களும் உடன் சேர்ந்துகொள்ளும். இந்த நிலைமையில் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மாத்திரை அளவை அதிகரிக்கலாம் அல்லது மருந்துகளின் சேர்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கட்டுப்படாத ரத்த அழுத்தம் என்பது உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்ட பிறகும் நீடிப்பது. அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நல்லது .                                                                           தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா