மாசி மக சிறப்புப் பதிவு: Print E-mail
Written by Dr. Somash   

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

மாசி மக சிறப்புப் பதிவு:

மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும்.அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.

கும்பகோணம்

முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகி, உலகமே அழியும் தருணம் ஏற்பட இருந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த பிரம்மன், சிவப்பெருமானிடம் முறையிட, அதற்கு ஈசன், “நீ எதற்கும் கலங்காதே. பிரளயம் எற்பட்டாலும் மீண்டும் அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்.” என்று கூறி, ஒரு கும்பத்தை கொடுத்து, “இதில் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளின் மூல காரணமாக இருக்கும் வித்துக்களை இதனுள் வைத்து விடு. அத்துடன் புராணங்களையும், மந்திரங்களையம் அதனுடன் வைத்து பூஜை செய். பிறகு அந்த கும்பத்தை மேரு மலையில் வைத்து விடு. அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார் பிரம்ம தேவரிடம் சிவபெருமான்.சிவபெருமானின் உத்தரவின்படி செய்தார் பிரம்ம தேவர். சில நாட்களுக்கு பிறகு மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது.

மேருமலையில் பிரம்மன் பூஜித்து வைத்த கும்பம், தண்ணீரில் மிதந்து வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் சிவப்பெருமான், ஒரு வேடன் உருவத்தில் வந்து, அந்த கும்பத்தை நோக்கி அம்பு ஏய்தபோது கும்பத்தின் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்தது.

அந்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்த இடமும், வேடன் உருவத்தில் சிவப்பெருமான் கும்பத்தின் ஒரு மூக்கு போன்ற கோணப்பகுதி உடைத்த இடமும் ஒரே இடம் என்பதால், அந்த இடத்திற்கு “கும்பகோணம்” என்று பெயர் உண்டானது.

மாசி மகம் அன்று கும்பகோணத்தில் விசேஷமாக கொண்டாடுவார்கள். அதேபோல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.

மாசி மகத்திற்கு சக்தி அதிகம்பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான், “எந்த புண்ணிய நதிகரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்.” என்கிறது சாஸ்திரம்.

மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி.

-நன்றி, நிரஞ்சனா ''பக்தி மலர்''. : தகவல் தொகுத்தவர் - பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.