ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்: Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! ‘சதமானம் பவதி சதாயு புருஷ: அதாவது நோய் இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ்வதே சிறந்தது’ என்றுதான் வேதமும் சொல்கிறது. மனித சரீரத்துக்கு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் உபாதைகள், பிறவியிலேயே ஏற்பட்ட ரோகங்கள், மற்றவர்களால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள், நீண்டகாலம் உள்ளேயே இருந்து முற்றிய நிலையில் வெளிப்படும் நோய்கள் எனப் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த ரோகங்கள்எல்லாம், ‘ஜன்மாந்தர கிருதம் பாபம் வ்யாதிரூபேண ஜாயதே தச்சாந்தி: ஔஷதய்: தானை: ஜப ஹோம அர்ச்சனாதிபி:’ முன் ஜன்ம பாவங்களின் விளைவாகவே மனிதர்களுக்கு வியாதிகள் ஏற்படுகின்றன என்றும், அவற்றிலிருந்து நிவாரணம் பெற மருந்தை உட்கொள்வது மட்டுமல்லாமல், ஜப, ஹோம, பூஜைகளையும் செய்யவேண்டும் என்றும் யோகரத்னாகரம் என்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது.பூர்வஜன்ம வினைப்பயனாக நமக்கு ஏற்படக்கூடிய சகல விதமான ரோகங்களில் இருந்து விடுபடவும், நோய் இல்லாமல் வாழவும் வேதங்கள் அருளிய அற்புதமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம். மிருத்யுஞ்சய என்றால், மிருத்யு என்ற யமனை ஜெயிப்பது என்று பொருள். ‘மிருத்யோர் மிருத்யு’ என்று போற்றப்பெறும் பரமேஸ்வரனிடம், மரண பயத்தை நீக்கவும், ஆயுள் விருத்திக்காகவும் பிரார்த்திக்கும் மந்திரமே மகா மிருத்யுஞ்சய மந்திரம். பொதுவாக, எல்லாவிதமான நோய்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு சப்த திரவிய மகா மிருத்யுஞ்சய மந்திரம் சிறந்தது என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் என்ற முப்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.

மகா மிருத்யுஞ்சய ஹோமம் என்பது 21 மந்திரங்கள் கொண்டது. அது வேதவிற்பன்னர்களால் செய்யப்படுவது. இருப் பினும், அவற்றுள் சிறந்த மந்திரமாக இருப்பது 'த்ரயம் பக' மந்திரம் ஆகும்.

மந்திரம்:''ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்''

இந்த மந்திரத்தின் ரிஷி: ககோள ரிஷி; சந்தஸ்: அனுஷ்டுப்; தேவதை: அம்ருத ம்ருத்யுஞ்சய ருத்ரர்; பீஜ மந்திரம்: சாம் சீம் சூம் சைம் சௌம் ச:

மந்திரத்தை ஜபிப் பதற்கு முன்பாகச் சொல்ல வேண்டிய தியான ஸ்லோ கத்தின் பொருள்:

‘பார்ப்பதற்கு நளினமாக இருப்பவரும், தலையில் ரேகையாக கங்கையை உடையவரும், அழகான கழுத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னியைக் கண்களாகக் கொண்டவரும், நான்கு கரங்களில் அபயம், பாசம், வேதங்கள் மற்றும் ஸ்படிகத்தாலும் வெண் முத்துக்களாலும் ஆன அட்சமாலை ஆகியவற்றை ஏந்தியவரும், சுபம் தரக்கூடிய வெண்மை நிறத்தவராகவும் விளங்கும் பரமேஸ்வரனை வணங்குகிறேன்!’

இப்படிப் பரமேஸ்வரனை தியானித்துவிட்டு, த்ரயம்பக மந்திரத்தை ஜபித்தால், நோய் இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.இந்த மிருத்யுஞ்சய ஹோமத்தில் அருகம்புல், சீந்தில்கொடி, சமித்து, அன்னம், நெய், பால், நெல் ஆகிய 7 திரவியங்கள் பிரதானமாக இடம்பெறுகின்றன. சீந்தில்கொடி அதிக மருத்துவ குணம் கொண்டது. கேன்சரையும் குணப்படுத்தவல்லது. அருகம்புல் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

- நன்றி:வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்--prepared by panchadcharan swaminathasarma