சிவார்ச்சனா சந்திரிகை Print E-mail
Written by Dr. Somash   

சிவார்ச்சனா சந்திரிகை
(வடக்கு வாயில் நோக்கிய சுவாமிக்கு வலது பக்கத்தில் பூசகர் ஆசனத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து பூசனை புரிதல்.)
ஸ்திரலிங்கம் அனைவருக்கும் உரிமையானமையாலும், உலகமனைத்திற்கும் அனுக்கிரம் செய்கின்றமையாலும், நான்கு திக்குக்களிலும் ஈசுவரனது விருப்பப்படி முகங்கள் இருக்கின்றமையால் எந்தத்திக்கில் வாயிலிருக்கின்றதோ அந்தத் திக்கை ஈசுவரமுடைய நேர்முகமாகக் கொள்ள வேண்டும். ஊர்த்துவமுகமும் இருதயம் பாதமென்னும் இவைகளுடன் வாயிலுக்கு நேர்முகமாக இருக்கின்றது. “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்.” “எந்தத்திக்கில் துவாரமிருக்கின்றதோ அந்தத் திக்கைக் கிழக்காக வைத்துக்கொள்ளல் வேண்டும்” என்னும் இவ்விரண்டு பிரமாணங்களாலும் வாயிலுக்கு எதிர் முகமாக ஊர்த்துவ முகம் இருக்கின்றதென்பது வலியுறுத்தப்பட்டது.
அல்லது ஊர்த்வமுகமொன்றே இருதயம் குஹ்யம் பாதமென்னுமிவற்றுடன் வாயிலுக்கு எதிர்முகமாக இருக்கின்றது; தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றன; துவாரத்தின் பேதத்தால் அவை பேதத்தையடையா என்று கொள்க. “ஊர்த்துவ முகத்திற்கு எந்தத்திக்கு மிருக்கலாம். தற்புருடம் முதலிய முகங்கள் கிழக்கு முதலிய திக்குக்களில் இருப்பதை விடுகிறதில்லை” என்னும் வசனத்தால் தற்புருடம் முதலிய கிழக்கு முதலிய திக்குக்களிலேயே இருக்கின்றனவென்பது பெறப்பட்டது. கூறப்பட்ட இரண்டு பக்கங்களும் காமிகத்திற் கூறப்பட்டவையே. இதுபற்றியே காமிகத்தில் மேற்குத் துவாரத்தை யருச்சிக்கும்பொழுது “துவாரத்திற்கு எதிர்முகமாக ஊர்த்துவ முகத்தைச் செய்யவேண்டும்” என்று ஆரம்பித்து, தற்புருடமுகத்தைக் கிழக்குத் திக்கிலாவது மேற்குத்திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், அகோர முகத்தைத் தெற்குத் திக்கிலாவது வடக்குத் திக்கிலாவது, சிந்திக்கலாமென்றும், வாமதேவமுகத்தை வடக்குத்திக்கிலாவது தெற்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும், சத்தியோசாத முகத்தை மேற்குத்திக்கிலாவது சிழக்குத் திக்கிலாவது சிந்திக்கலாமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

அந்தக் காமிகத்திலேயே தெற்குத் துவாரத்தை யருச்சிக்குங்கால் அகோரம் அல்லது தற்புருடத்தைத் தெற்குத் திக்கிலும், அகோரம் அல்லது சத்தியோசாதத்தை மேற்குத் திக்கிலும், சத்தியோசாதம் அல்லது வாமதேவத்தை வடக்குத் திக்கிலும், வாமதேவம் அல்லது தற்புருடத்தைக் கிழக்குத் திக்கிலும் அருச்சிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது.
எல்லாத் திரலிங்கங்களையும் வடக்கு முகமாக இருந்து பூசிக்க வேண்டும். இதற்கு பிரமாணம் “லிங்கமாவது பிரதிமையாவது இன்னும் மற்றவையாவது எந்தத் திக்கு முகமாகச் செய்யப்படுகின்றனவோ அந்தத் திக்கில் பூசகன் வடக்கு முகமாயிருந்து கொண்டு சிவனைப் பூசிக்க வேண்டும்;” என்னு மிவ்வசனமேயாம்.இவ்விடத்தில் முக்கியமான கிழக்கு முகமாக இருக்கும் லிங்கத்தைப் பூசிக்கும் பொழுது முக்கியமான ஆக்கினேய திக்கிலிருக்கும் பூசகனுக்கு முக்கியமாகவே வடக்கு முகமாக இருத்தல் பொருந்துகின்றது. (மேற்கு முகமாயிருக்கும்) ஈசுவரனுக்கு இடது பக்கத்தில் நிருதிதிக்கில் அம்பிகை அமர்ந்திருப்பின், அவ்விடத்தில் பூசகனிருந்தால், அம்பிகை இருக்கக்கூடிய பாகமான வடக்குத்திக்கில் இருக்கக்கூடாதென்னும் விலக்கிற்கு பிரோதமாகுமேயெனின், ஆகாது. எவ்வாறெனில், கூறுதும்:- காமிகத்தில் பச்சிமத்துவாரார்ச்சன படலத்தில் இடது அல்லது வலது பக்கத்தில் ஈசுவரனுடைய பார்வையையும், இரண்டு கைகளையும், ஒரு முகத்தையுமுடைய மனோன்மனியை ஸ்தாபிக்க வேண்டுமென்று மேற்கு முகமான லிங்க பூசாவிதியில் வலது பக்கத்திலும் தேவி இருக்கலாமென்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றமையால் நிருருதி திக்கிலிருக்கும் பூசகன் ஈசுவரருடைய வலது பக்கத்திலமர்ந்திருக்கும் ஈசுவரியினுடைய பாவனையைச் செய்ய வேண்டும். ஆகையால் விரோதமில்லையென்க.
இவ்வாறே சுவாமி தெற்கு முகமாக இருக்கும்பொழுது அந்தத் திக்குமுக்கியமல்லாத கிழக்காகும். அப்பொழுது நிருருதி திக்கு ஆக்கினேய திக்காகும். கிழக்கு வடக்காகும். அகையால் நிருதி திக்கில் பூசகன் கிழக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பது, ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்து கொண்டு பூசிப்பதாக ஆகும்.இவ்வாறே சுவாமி வடக்குமுகமாக இருக்கும்பொழுது அந்தவடக்கே கிழக்காகும். ஈசானமே ஆக்கினேயமாகும். மேற்கே வடக்காகும். ஆகையால் பூசகன் ஈசானத்தில் மேற்கு முகமாயிருந்துகொண்டு பூசிப்பது ஆக்கினேயதிக்கில் வடக்கு முகமாக இருந்துகொண்டு பூசிப்பதாக ஆகும்.
MIH தலைமையகம்.