தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சனீஸ்வர வழிபாடு!!!
அண்மையில் சனி மாற்றம் என்று பலரும் இல்லை இல்லை என்று இன்னொரு சாராரும் ஆலயங்களும் பலவாறு குழப்பத்தில் இருந்தார்கள் என்பதைக் கண்டோம்! ஒரு பஞ்சாங்கம் கடந்த வாரம் சனி மாற்றம் என்றும் இன்னொரு பஞ்சாங்கம் அடுத்த வருடம் என்று அறிவித்தார்கள்!
தமிழ் நாட்டில் வெளிவரும் பஞ்சாங்கங்களும் பலவாறு கணித்து இருந்தார்கள்! நாம் அவைபற்றி அதிகம் குழம்ப வேண்டிய தேவை இல்லை! காலாகாலமாக நாம் எந்தப் பஞ்சாங்கத்தை பின் தொடர்கிறோமோ அது என்ன சொல்கிறதோ அதையே பலரும் பின் பற்றுமாப் போல பின் பற்றினால் ஒரு தடுமாற்றமும் இல்லை. பஞ்சாங்கங்களின் கணிப்புகள் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை நண்பர்களே!!!
சனி மாற்றமோ இல்லையோ , அல்லது எப்ப என்பது என்று நாம் கவலைப் படாமல் , எல்லாக் கிழமைகளிலும் , எப்போதும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். அவரின் பெயரில் ஒரு கிழமை இருப்பதால், அந்தத் தினத்துக்கு சிறப்பு அதிகம் என நம் மனம் எண்ணுகிறது. ஆனால் அது அப்படி அல்ல!!!
எல்லா நாளும் வழிபட வேண்டியவர் அவர். வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வோம். அங்கு நவக் கிரகங்களை வலம் வரும்போது, சனீஸ்வரரையும் சேர்த்தே வலம் வருவோம்!
போரில் இறங்கிய ஸ்ரீராமன், ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து, சூரியனை வழிபடவில்லை. அவசர அவசியத்தை உணர்ந்து வழிபட்டார்; வெற்றிபெற்றார். பிறந்த நாளில் நவக்கிரக ஹோமம் உண்டு. அப்போதும் சனீஸ்வரரை வழிபடுவோம். அந்த தினம் சனிக்கிழமையாக இல்லாமல் இருக்கலாம். அதேபோல், நவக்கிரக பிரதிஷ்டை செய்யும் நாளும் சனிக்கிழமையாக இருக்காது!
தினமும் அபிஷேகம் உண்டு. அதில் சனீஸ்வரருக்கும் அபிஷேகம் இருக்கும்! எல்லாக் கிழமைகளிலும் காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளைகளிலும், இரண்டு கைகளிலும் தண்ணீரை ஏந்தி சனீஸ்வரரை வழிபடுவார்கள் அந்தணர்கள். ஆக, எல்லாக் கிழமைகளிலும் எல்லா நாட்களிலும் , எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபடலாம். சனி மாற்றத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை!!!
ஆகவே நண்பர்களே, வழிபாடுகளை எப்போதும் நாம் மேற்கொள்ளலாம்! குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் புறம் தள்ளுவோம். சனீஸ்வரன் உட்பட அனைத்து தெய்வங்களையும் எப்போதும் வழிபடுவோம். பலனைப் பெறுவோம்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

சனீஸ்வர வழிபாடு!!!