தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
வளரும் பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை சொல்லிக் கொடுப்போம்!
எங்கள் சமய வழிபாடுகளை நாமே கேலி செய்து கொண்டிராமல் பிள்ளைகளை நல் வழிப்படுத்துவோம். மற்ற மற்ற சமயங்களில் தங்கள் வழிபாடுகள் பற்றிய விஷயங்களை கேலியாகப் பேசுவதில்லை என்பது நாம் அறிந்த விடயம்!
நம் கலாசாரத்தின் அடையாளங்களை , பண்பாடுகளின் உயர்வுகளை அடுத்த தலைமுறையினரிடம் தகுந்த முறையில் எடுத்துச்சொல்லி, அதன்படி அவர்களை நடக்கச்செய்வதே நம்முடைய தலையாய கடமை. ஒரு சமுதாயமானது நல்ல ஒழுக்கத்தினால்தான் உயரும். அதற்கு ஆன்மீக கல்வி மிக மிக பிரதானம்!!
பணம் மற்றும் படிப்பு ஆகியவை நம்முடைய வெளியுலக வாழ்க்கைக்கு வேண்டுமானால் உதவுமே தவிர, மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு , சீரான சிறப்பான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே முக்கியமானது.
குழந்தைகள் நம்மை நன்றாகக் கவனிக்கிறார்கள். எனவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளைப் பின்பற்றி வாழவேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் நம் குழந்தைகளும் ஒழுக்கமாக வாழ நினைப்பார்கள்.
நம்முடைய ஸநாதன தர்மத்தின் கருத்துகளையும், புராண, இதிகாச நிகழ்வுகளையும், தேவார திருவாசக புராணங்களை நாம் நன்றாகக் கற்றுணர்ந்துகொண்டு, அவற்றை நம் குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கவேண்டியது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல நமது கடைமையும் கூட!!!
தற்காலத்தில் நாம் கண்டது, குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரிய கலையாகவே உள்ளது. நாம் மிகவும் பொறுமையாக, தெய்வ பக்தியுடனும் விடாமுயற்சியுடனும் குழந்தைகளை நம் கலாசாரப்படி வளர்க்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் நல்ல மனத்துடன்தான் இருக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் இருக்கும் சூழ்நிலைகள் பலரையும் தவறான பாதைக்கு இழுத்துவிடுகின்றன.
எனவே, குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு நன்மை தீமைகளை விளக்கிவந்தால், அவர்களின் எண்ணங்களும் நல்லவையாக இருக்கும். அவர்களின் போக்கிலும் நல்ல மாறுதல்கள் தென்படும். நம்முடைய தெய்வ பலத்தினாலும் அளவற்ற நம்பிக்கையினாலும் நம் குழந்தைகளை நல்ல வழியில் இருக்கச்செய்வது எளிதான காரியம்தான்.
நாம் செய்ய வேண்டியவற்றை உரிய காலங்களில் செய்யாமல் விட்டு விட்டு, ‘கடவுள் அருள் கிடைக்கவில்லை , கடவுள் கண் திறக்கவில்லை என்று கடவுளை நிந்திப்பதாலும் புலம்புவதாலும் எதுவித பயனும் இல்லை நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
வளரும் பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை சொல்லிக் கொடுப்போம்!