விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா

தெரிந்து கொள்வோம்நண்பர்களே!
நன்றி: தியாக. மயூரகிரி சிவாச்சாரியார் , நீர்வேலி , இலங்கை.
விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா
இப்பெருவிழா பற்றிச் சிக்கலான சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த அளவில் பதில் அளிக்க விழைகிறேன்.
1. இந்த திருவிழா இலங்கையில் மட்டுமா நிகழ்கிறது?
இல்லை. இது பாரத தேசமெங்கும் நிகழ்கிறது. அதிலும் ஆகம வழிபாடு நிகழ்கிற தென்னகத்திலும் ஈழத்திலும் ஏறத்தாழ ஒன்று போல நிகழ்கிறது.
2. அவ்வாறாயின் வாழை வெட்டு என்று தமிழகத்தில் இல்லையே?
அங்கே அம்பு போடுதல், பாரி வேட்டை என்பர். இங்கே வாழை வெட்டலாக இது நடக்கிறது. இரண்டு இடங்களிலும் குதிரை வாகனத்தில் இறைவன் / இறைவி எழுந்தருளி இது நிகழ்கிறது.
3. இது மகிஷாஸூர சம்ஹாரமா?
அப்படி சொல்வதற்கில்லை. இது பொதுவாக அசுர (அசுர குண / சத்ரு) சம்ஹாரம் ஆகும்.
4. மற்றைய விழாக்கள் போலன்றி இந்த நாளில் ஏன் ஊர்களில் எல்லாம் இறை மூர்த்தங்கள் ஊர்வலம் சிறப்பாக நிகழ்கிறது?
எல்லையைத் தாண்டுவது, வன்னி மரத்தை வணங்குவது, தேசாந்தரங்களுக்குப் பயணம் போன்றவைகள் இந்த விஜயதசமி நன்னாளில் செய்யத் தகுந்தனவாம் என்று தரும சாஸ்திரங்கள் சொல்லும்.
ஊருக்கு வெளியில் ஈசான திசையில் வன்னி மரத்தை பூசிக்க வேண்டியது .. ஊர் எல்லையை இந்தப் பூசைக்கு முன்போ அல்லது பின்போ தாண்டலாம் என்றும் அவை சொல்கின்றன.
எனவே, ராஜா போல ஊருக்கு வெளியே இறைவன் குதிரையில் எழுந்தருள்கிறார்.
5. அப்போது ஏன் அங்கே வன்னி வாழை வெட்ட முன் புண்ணியாகவாசனம் நிகழ்கிறது? சூரன் போராகில் ஏன் சுத்திச்சடங்கு?
முன்பு சொன்னது போல இது ஒரு அசுர சம்ஹாரமாக மட்டும் கருதி விட முடியாது.
கேள்வியில் இருப்பது போல ஸமீ விருக்ஷம் என்ற வன்னி மரம் இங்கு முதன்மை பெறுகிறது. வன்னி மர கிளை ஆவது வைத்தே பூஜை நிகழும்.
தருமசாஸ்திரம் புரோஹிதர்களையும் மந்திரிப் பிரதானிகளையும் முன்னிட்டுக் கொண்டு அரசன் தன் குதிரை மீதமர்ந்து , வன்னி மரத்தின் அருகே சென்று , கீழிறங்கி ஸ்வஸ்தி வாசன பூர்வகமாக வன்னியை பூசிக்க வேண்டும் என்கிறது.
மம துஷ்க்ருத அமங்கலாதி நிரஸநார்த்தம் க்ஷேமார்த்தம் ” யாத்ராயாம் விஜயார்த்தம் ” ச ஸமீ பூஜாம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்ய வேண்டுமாம்.
( என்னுடைய பாபங்கள், அமங்களங்கள் இவைகளை போக்கிக் கொள்ளவும் , நன்மைக்காகவும், யாத்திரையில் வெற்றிக்காகவும் இந்த வன்னி மரத்தை வணங்குகிறேன் )
அமங்களானாம் ஷமனீம் ஷமனீம் துஷ்க்ருதஸ்ய ச ; து:க்க ப்ரணாசினீம் தந்யாம் ப்ரபத்யேஹம் ஷமீம் சுபாம் ||
( அமங்களங்களையும் பாபங்களையும் அழிப்பதாய், துன்பங்களைப் போக்குவதாய், எல்லா வகைகளிலும் சிறந்ததாயுமுள்ள சுபமான வன்னியை வணங்குகிறேன் )
என்கிற மந்திரத்தைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும் !
எனவே தான் அங்கே புண்யாக வாசனமும் ஸமீ விருக்ஷ பூஜையும் நடக்கிறது.
6. அப்போது வாழையை வெட்டுவதும் வன்னி மரத்துக்கு அம்பு போடுவதும் தவறு அல்லவா?
இப்படி நானே ஒரு காலத்தில் நினைத்திருக்கிறேன். ஆனால், கவனமாக பார்க்கிற போது அதுவும் தேவை என்றே தெரிகிறது.
இங்கு வாழை என்பது ஒரு குறியீடு தான்.
நல்லதைப் பார்ப்பதற்கும், நல்லதை அடைவதற்கும் , பகைவர்களின் இப்பூஜை அவசியமாகும் !!
அச்மந்தக மஹாவ்ருக்ஷ மஹாதோஷ நிவாரண |
இஷ்டாநாம் தர்சனம் தேஹி சத்ரூணாஞ்ச விநாசனம் ||
என்று ப்ரார்த்திக்க வேண்டும் என்று சொல்கிற சாத்திரம்,
எதிரியின் உருவத்தை, பிம்பத்தைச் சமைத்து, அரசன் தன் அம்புகளால் அதனை வீழ்த்த வேண்டும் என்கிறது.
எனவே அதற்கு பதிலாக தமிழகத்தில் வன்னி மரத்தில் அம்பெய்வதும் ஈழத்தில் வன்னி வாழை வெட்டுவதும் சாத்திரங்களின்படி சரியே !!
7. அப்போது என்ன வாழை வைக்க வேண்டும்? மூன்று துண்டாக வேணும். இப்படி உண்டா?
இது எல்லாம் ஊர் வழக்கமாகலாம். எனக்கு தெரிந்த அளவில் முன்பு சொன்னது போல வாழை குறியீடு தான்.
8. இந்த விழா ஊரெல்லாம் பேரெழுச்சி ஏற்படுத்துகிறதே? சுவாமி குடியிருப்புகள் வழியே நீண்ட தூரம் செல்வதால் மிக அழகாக இருக்கிறதே?
ஓம்/ ஆம். இதுவே இவ்விழாவின் பெரும் சிறப்பு.
வாத்தியங்களுடனும் , ஆடல் பாடல்களுடனும் இப்பூசை விமரிசையாகச் செய்யப்பட வேண்டியது என்பதே சாஸ்திர வாக்கு.
அரசனின் நன்மையை விரும்புவோர் அச்சமயம் உடனிருக்க வேண்டும் !
கோயில்களில் அச்சமயம் செந்தமிழ் பாடுவார்களும், வடமறை வல்லுனர்களும் எம்பெருமானைச் சூழ்ந்திருப்பது அவன் அருளை வேண்டியன்றோ !
நால் திசையிலும் நம் தேவுக்கு வெற்றியே வசமாகட்டும் என்கிற காரணம் பற்றியே , நாற்புறமும் அம்பெய்வது ..
“சதுர் திக் விஜயார்த்தம் பாண சதுஷ்டயம் ப்ரயுஜ்ய “என்கிறது பாஞ்சராத்ர ஆகம பாத்ம சம்ஹிதை
விஜய முஹூர்த்தத்தில் தேசாந்தர கமனம் ( வெளி தேசங்களுக்குச் ( ஊர்களுக்கு ) செல்ல வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் பேசும்.
9. இது வெற்றி விழாவா? இவ்விழாவை எல்லோரும் தரிசிக்கலாமா?
ஆம் இது வெற்றி விழா தான்.
விஜய தசமீயன்று ஒருவராலும் வெல்லப்பட முடியாதவளான அபராஜிதை மஹாலக்ஷ்மியை வழிபடவேண்டும் என்று சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !
அவளை வழிபடும் அரசர்கள், ” யாத்ராயாம் விஜய ஸித்த்யர்த்தம் ” என பூஜை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் !
ஹாரேண து விசித்ரேண பாஸ்வத் கநக மேகலா |
அபராஜிதா பத்ரதா கரோது விஜயம் மம ||
என்கிற மந்த்ரத்தை வெற்றியை விரும்பும் அரசன் சொல்ல வேண்டும். என்றெல்லாம் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
10. விஜய தசமி -மானம்பு விழாவின் தனிச்சிறப்பு யாது ?
இது சுவாமி ஊர்வலம், வீட்டு வாசல்- தெரு அலங்காரங்கள், வீடு தோறும் நிறை குடம் மங்கல -ஆராத்தி, விசேஷ நெய்வேத்யம், அது பகிரப்படும் பாங்கு என்று இந்த விழா ஊரெங்கும் பக்தி மணம் பரப்புவதே தனிப்பெரும் சிறப்பாகும்.
அன்புடன்,
மயூரகிரி சிவாச்சார்யார்
(நான் அறிந்த சிலவற்றை பலரும் கேட்பதால் பகிர்ந்தேன். )
தொகுப்பு:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணைய தள மின் இதழ் ஆசிரியர் ,
விஜயதசமி- மானம்பு- வாழை வெட்டு – அம்பு போடல் திருவிழா
Scroll to top