ஆஞ்ச நேயரை பெண்களும் வழிபடலாம்!

பலர் எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் சில எண்ணங்களை கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் வழிபாடு, ஐயப்பன் வழிபாடு என்பன பெண்களுக்கு உரியது அல்ல என்ற தப்பான எண்ணங்கள் கொண்டிருப்பார்கள்! அது பிழையான எண்ணங்கள்.
ஆஞ்சநேயர், தெய்வீக சக்தி வாய்ந்தவர். அவரையும் கடவுளர்களில் ஒருவராக எண்ணி வழிபடுகிறோம். இதில் ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? ஆஞ்சநேயர், ஐயப்பன் முதலான இறைசக்திகள் பிரம்மச்சரிய விரதம் கொண்டவர்கள், இவர்களை பெண்கள் வழிபடக்கூடாது என்ற கருத்தினை ஏற்பதற்கில்லை. சபரிமலை தவிர்த்து இதர ஐயப்பன் ஆலயங்களுக்கு பெண்கள் சென்று வழிபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சபரிமலையில் கூட மாத விலக்கு நின்ற பெண்களை அனுமதிக்கிறார்கள்.
இறைசக்திகளின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பின்னால் பல ஆன்மிக ரகசியங்கள் அடங்கியுள்ளன.
பெண்கள் இந்த சக்திகளை பூஜிப்பதாலும், அவர்களை வழிபடுவதாலும் இறைசக்திகளின் விரதம் ஒருபோதும் களங்கம் அடையாது. பொதுவாக ஆஞ்சநேயர் மன உறுதியைத் தரவல்லவர் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து. அடிக்கடி சஞ்சலம் அடைபவர்களாக இருந்தால்,, அவர்களது சஞ்சலத்தைப் போக்கி மனஉறுதியைத் தரவேண்டி அவர்கள்தான் அதிகமாக ஆஞ்சநேயரைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்! அது ஆணாக இருந்தால் என்ன ,பெண்களாக இருந்தால் என்ன? சஞ்சலம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே!
சீதாப்பிராட்டி மனதளவில் பெருந்துயரம் கொண்டிருந்தபோது, அவரது துயரத்தைப் போக்கியவர் ஆஞ்சநேயர்தான், அல்லவா? ஆஞ்சநேயர், பரமேஸ்வரனின் அம்சம் என்ற கருத்தும் ஆன்மிகவாதிகளின் மத்தியில் நிலவுகிறது. பொதுவாக பலசாலியாக இருப்பவன் அறிவாளியாக இருப்பதில்லை, அறிவாளியாக இருப்பவர் உடல்வலிமை குன்றியவனாக இருப்பான் என்ற எண்ணத்தில் பலர் இருப்பார்கள், ஆனால், உடல் வலிமையும், புத்திகூர்மையும் ஒருங்கே இணையப்பெற்ற இந்த அற்புதமான இறைசக்தியை பெண்கள் பூஜிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆஞ்சநேயரை வழிபடும் பெண்கள் புத்திசாலிகள் ஆகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஆஞ்ச நேயரை பெண்களும் வழிபடலாம்!
Scroll to top