அறிந்து கொள்வோம் நண்பர்களே:-
ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்!!!
ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… எவனோ ஒருவனுக்கு அடிமையாகியே தீர வேண்டும் என்பது மனித குலத்திற்கான விதி! – அது சிவனுக்காயிருந்தால் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. ஆனால் தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்! எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை. ஆனால் சித்தமலம் அறுவித்து சிவமாக்கும் தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்! எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை . ஆனால் பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள் செய்யும் தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்! தோழமையின் பொருட்டு தூது சென்றவனும். பிட்டிற்காய் மண் சுமந்து பிரம்படி பட்டவனும். ஏன் இவ்வுலக உயிர்கள் இன்புற வாழ வேண்டி கொடிய நஞ்சுதனைத் தானுண்டு இன்று வரை அதை தன் கண்டத்தில் சுமப்பவனுமான பெருங்கருணையான் சிவபெருமானே!
அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… சாதி. குலம் எனும் சுழிப்பட்டுத்திரியும் அவல நிலை நீங்கி. சிவக்கோலமே சிவமெனக்கருதி அடியார்க்கு அடியாராய் சிவ குடும்பங்களாய் அன்புசெய்து வாழும் அடியார் திருக்கூட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… வெற்றித்திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு, ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… எத்தனை பெரிய கண்டம் தோன்றிடினும் உனை வந்து அண்டாமல் காக்கும் நீ அணிந்திருக்கும் கண்டமணி உருத்திராக்கம், ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
21 தலைமுறையை நரகத்தில் வீழாது காக்கும் நீ படிக்கும் திருவாசகம் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… துன்பங்களைக்கண்டு நீ ஓடிய காலம் போய். துன்பங்கள் உன்னைக்கண்டு ஓடும் நீ ஓதும் திருவைந்தெழுத்தைக்கேட்டு சிவாயநம! ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்.
• அறியாமை விலகும் • ஆனந்தம் பெருகும் • இருள் அகலும் • ஈசனருள் பெருகும் • உண்மை விளங்கும் • ஊழ்வினை துலங்கும் • எப்போதும் மலர்ந்திருப்பாய் • ஏகாந்தத்தில் கலந்திருப்பாய் • ஐம்பூதங்களும் உன்வசமாகும் • ஒருவன் என்னும் ஒருவன் வருவான் •ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான் • ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்,
சவமாக வேண்டிய நீ சிவமாவாய் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்.