தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
“காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை”” என்கிறது ஒரு சுலோகம்.
அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.
காயத்ரி வேதங்களின் தாய். பாவங்களைப் போக்குபவள்.
பூமியிலும் சொர்க்கத்திலும் காயத்ரி மந்திரத்தைவிடவும்
பரிசுத்தம் செய்யும் பொருள் வேறில்லை.
காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை ஜபித்தால் மங்களம் உண்டாகும்.நான்கு வேதங்களை ஓதியதன் பலன் கிடைக்கும்.
ஆரோக்கியம், பலம், அழகு, அறிவு, பிரம்மதேஜஸ் போன்றவை உண்டாகும். காயத்ரி ஜெபிப்பவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்டமாசித்திகளையும் தரும் என்பர் பெரியோர்.
காயத்ரி மட்டுமல்லாது, மற்ற எந்த மந்த்ரமானாலும் ஜபம் செய்யும் விதம் பற்றிச் சொல்லுகையில், மூன்றுவிதமாகச் சொல்லுகிறார்கள்.
வாசிகம், உபாம்சு, மானஸம் என்பவை அந்த மூன்று விதங்கள். இவற்றில் வாசிகம் என்பது மந்த்ரத்தை வாய்விட்டு, பிறருக்குக் கேட்குமளவில் சொல்வது, சப்தமில்லாது, உதடுகளை அசைத்தவாறு சொல்வது உபாம்சு, உரக்கச் சொல்லாமல், உதடுகளும் அசையாது, மனதளவில் மந்த்ரத்தைச் சொல்லுவது மானஸம். இவற்றில் மானஸம் உத்தமம், உபாம்சு மத்யமம், வாசிகம் அதமம்.
காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும்,
பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும்,
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக
காயத்ரி ஸ்தோத்திரம் குறிப்பிடுகிறது.
காயத்ரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது.
“ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.’
“எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக’ என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.